Tuesday, December 23, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2015


சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள நந்தனம் YMCA மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 09 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை “சென்னை புத்தகக் கண்காட்சி 2015” ஏற்பாடாகியிருக்கிறது. புத்தகக் கண்காட்சியை ஒட்டி இந்த முறையும் காலச்சுவடு பதிப்பகம் பல்வேறு தன்மையிலான புதிய புத்தகங்களைக் கொண்டு வருகிறது. அதில் சில முழுத்தொகுப்புகளும் அடக்கம். வாசகர்களின் நலன் கருதித் தேர்ந்தெடுத்த சில தொகுப்புப் புத்தகங்களை முன் வெளியீட்டுத் திட்டத்தில் கொடுக்க இருக்கிறோம். உங்களுக்கு சலுகை விலையில் இப்புத்தகங்கள் வேண்டுமெனில் முன்பதிவு (Pre Order) செய்து ஜனவரி மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். கீழ்காணும் நான்கு புத்தகங்களையும் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கக் கடைசி நாள்: ஜனவரி 5, 2015 

காலச்சுவடு முன் வெளியீட்டுத் திட்டம் – 2015

1. சாமிநாதம் – உ. வே. சா முன்னுரைகள்
ரூபாய்: 1000, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 650

2. பாரதி பாடல்கள் – பழ. அதியமான்
ரூபாய்: 750, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 490

3. தி. ஜானகிராமன் சிறுகதைகள் – சுகுமாரன்
ரூபாய்: 975, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 590

4. தமிழக ஓவியங்கள் – ஒரு வரலாறு
ரூபாய்: 475, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 290

இவைகள் தவிர “கிளாசிக் நாவல்கள், கிளாசிக் சிறுகதைகள், கிளாசிக் கட்டுரைகள், தன் வரலாறுகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்” என ஏறக்குறைய 60 புத்தகங்களைச் சென்னை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் வாங்கக் கிடைக்கும். அவற்றில் சில உங்களுடைய கவனத்திற்கு:

கட்டுரைகள்:

1. பச்சைத் தமிழ்த் தேசியம் – சுப. உதயகுமாரன் (Rs. 125)
2. தலித் பொதுவுரிமைப் போராட்டம் – கோ. ரகுபதி (Rs. 160)
3. கனம் கோர்ட்டாரே! – நீதிநாயகம் கே. சந்துரு (225)
4. எம். எஸ். எஸ். பாண்டியன் கட்டுரைகள் (Rs. 75)
5. ஆளுமைகள் தருணங்கள் – ரவி சுப்பிரமணியன் (Rs. 100)
6. மனநோய்களும் மனக்கோளாறுகளும் – Dr எம். எஸ். தம்பிராஜா (Rs. 290)
7. கதைப்பாடலில் கட்டபொம்மன் (145)
8. தமிழகத்தில் ஈழ அகதிகள் – தொ. பத்தினாதன் (80)
9. காலந்தோறும் பெண்கள் – ராஜம் கிருஷ்ணன் (150)
10. திராவிட மானுடவியல் – பக்தவச்சல பாரதி (240)
11. தமிழ்க் கிறித்தவம் – ஆ. சிவசுப்ரமணியன் (135)

மொழிபெயர்ப்புகள்:

1. கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் – மகாசுவேதா தேவி
2. நான் மலாலா – தமிழில்: பத்மஜா நாராயணன்
3. ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
4. மனவளமான சமுதாயம் – எரிக் ஃபிராம்
5. ஆட்கொல்லிச் சிறுகதை – ஜிம் கார்பெட்
6. நான் மலாலா – மலாலா யூசுஃப்ஸை

கவிதைகள்:

1. பிரமிள் கிளாசிக் கவிதைகள்
2. ஞானக்கூத்தன் கவிதைகள் (Rs. 160)
3. ஊர்வசி கவிதைகள் (Rs. 60)

புனைவுகள்:

1. அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு – அம்பை (Rs. 100)
2. சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்
3. ஆலவாயன் – பெருமாள்முருகன் (Rs. 175)
4. அர்த்தநாரி – பெருமாள்முருகன் (Rs. 175)
5. இரண்டு விரல் தட்டச்சு – அசோகமித்திரன்
6. யுத்தங்களுக்கிடையில்... – அசோகமித்திரன் (Rs. 100)
7. பயணம் – அரவிந்தன் (Rs. 350)
8. கனவுச்சிறை – தேவகாந்தன்
9. 1958 – அ. ரவி (Rs. 200)
10. கங்கணம் – பெருமாள் முருகன் (Rs. 300)

மேலும், “ஜி. நாகராஜன், மௌனி, சுந்தர ராமசாமி, கு. ப. ரா, கு. அழகிரிசாமி கிருஷ்ணன் நம்பி, அம்பை” போன்ற கிளாசிக் எழுத்தாளர்களின் முழுத் தொகுப்புகளையும் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறோம். அவையாவும் கூட காலச்சுவடு பதிப்பகத்தில் தற்போது வாங்கக் கிடைகிறது. நன்றி... 

தொடர்புக்கு:

காலச்சுவடு பதிப்பகம்,
பழைய எண்: 130, புதிய எண்: 257,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ,
சென்னை - 600 005
91-44-2844 1672

Web: www.kalachuvadu.com
FB: www.facebook.com/Kalachuvadu Magazine

Chennai Book Fair 2015 | YMCA College - Nandanam, MountRoad, Chennai

Thursday, March 27, 2014

வியத்தலும் இலமே – ஆளுமைகள் சந்திப்புகள்

பல்துறையைச் சேர்ந்த மேற்கத்திய ஆளுமைகளுடனான சந்திப்புகளை அ. முத்துலிங்கம் தொகுப்பாக்கியிருகிறார். தமிழ் சூழலில் இது போன்ற முயற்சி புதியது. மேற்கத்திய நவீன இலக்கியத்தின் போக்கை படைப்பாளிகளின் உரையாடல்களின் மூலம் வெளிக்கொண்டு வரும் உரையாடல்கள் இவை. . சமீபத்தில் நோபல் விருது பெற்ற அலிஸ் மன்றோ முதல் பல எழுத்தாளர்கள் இப்புத்தகத்தில் உரையாடுகிறார்கள். போலவே பறவையியல் விஞ்ஞானி கிறிஸ் ஃபிலார்டி, மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஜெனிவீவ், ஆஸ்கார் விருது பெற்ற பிரிஸ்கி – காஃவ்மன், பிரபல நாடகக்காரரான டீன் கில்மோர் என உரையாடுபவர்களின் பட்டியல் நீள்கிறது.

போலவே “ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இலங்கை, இந்தியா, கானா, சோவியத் யூனியன்” போன்ற நாடுகளில் பிறந்து - புலம்பெயர்ந்த ஆங்கில எழுத்தாளர்களாக விளங்கும் சிலரது பகிர்வுகளும் படைப்பாளிகளின் வேறுபட்ட முகங்களை நமக்குக் காட்டுகிறது. இந்த உரையாடல்கள் வித்யாசமான, அதே நேரத்தில் சுவாஸ்யமான நேர்முகங்களாகவும் பதிவாகி இருக்கின்றன. தொகுப்பிலுள்ள ஆளுமைகளைப் பற்றிய விவரங்கள் 
பின்வருமாறு: 
அலீஸ் மன்றோ (Alice Munro) – மேற்கத்திய சிறுகதையாளர். இவரது பல்லாண்டு கால இலக்கியப் பங்களிப்பிற்காக சமீபத்தில் நோபல் விருது அறிவித்திருக்கிறார்கள். கனடா ஆளுநர் விருதை மூன்று முறையும், கெல்லர் பரிசை இரண்டு முறையும், உலக அளவில் பொதுநல நாடுகள் எழுத்தாளர் பரிசு, ஓ ஹென்றி பரிசு, ஸ்மித் இலக்கிய விருது, ரில்லியம் புத்தகப் பரிசு என்று பல விருதுகளையும் பெற்றவர். இதுதவிர National Book Critics Circle Award, US National Arts Club பரிசும் பெற்றவர். (இவரைப் பற்றிய ஒரு நேர்முகமும், ஒரு கட்டுரையும் இத்தொகுப்பில் உள்ளது.)

மார்கிரட் அட்வூட் (Margaret Atwood) – பிரபல ஆங்கில எழுத்தாளர். இவரது எழுத்து பெண்ணியம் சார்ந்தது. கனடா ஆளுநர் பரிசை இரண்டு முறையும், 1996ல் Alias Grace நாவலுக்கு கெல்லர் பரிசும், 2000 ஆண்டில் The Blind Assassin என்ற நாவலுக்கு புக்கர் விருதும் பெற்றவர். 12 நாவல்கள், 15 கவிதைத் தொகுப்புகள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 4 சிறுவர் இலக்கிய நூல்கள், 4 கட்டுரைத் தொகுப்புகள் என வளமான இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர். உலகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி சிறப்பு செய்திருக்கின்றன. Web Site: www.margaretatwood.ca

அமினாட்டா ஃபோர்னா (Aminatta Forna) – ஆப்பிரிக்க வம்சாவளி. இங்கிலாந்தில் சட்டம் படித்துவிட்டு BBC-இல் பணி புரிந்தவர். பத்திரிகையாளராகவும் இயக்குநராகவும் தொகுப்பாளராகவும் வேலை பார்த்தவர். பல விவரணப் படங்களை எடுத்தவர். இவரது “Through African Eyes” விவரணப்படம் பல்கலைக்கழக பயிற்சி வகுப்புகளுக்கு அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது. நாவல், கட்டுரை, சிறுகதை எனப் பல தளங்களிலும் இயங்கக் கூடியவர். இவரது The Devil that danced on the water நாவலின் வெற்றிக்குப் பிறகு முழுநேர எழுத்தாளர் ஆனவர். Web Site: www.aminattaforna.com

அகில் சர்மா (Akhil Sharma) – இந்தியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். பிரின்ஸ்டன், ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்தவர். யூனிவேர்செல் ஸ்டூடியோவில் சினிமாவிற்கு வசனம் எழுதியவர். ஹார்வார்ட்டில் சேர்ந்து சட்டம் பயின்று Investment Bankerஆக நியூயோர்க்கின் பிரபலமான கம்பெனியில் ஆண்டொன்றிற்கு மில்லியன் டாலர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். பின்னர் கல்யாணமான சில மாதங்களில் வேலையை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக மாறியவர். 

டேவிட் செடாரிஸ் (David Sedaris) – இருபது வயதில் நியூயார்க் நகரில் துப்புரவுத் தொழிலாளராக வேலை பார்த்துக்கொண்டே எழுதத் தொடங்கியவர். இவரது படைப்புகள் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒருபால் ஈர்ப்புடையவர். இவரது பல நாடகங்கள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. லாம்டா இலக்கிய விருதும் தேர்பர் விருதும் பெற்றவர். தனது ஆண் காதலருடன் வசிக்கிறார். (இவரது ஒரு நேர்காணலும், ஒரு சந்திப்பும் தொகுப்பில் உள்ளது.) Web Site: www.davidsedarisbooks.com

டேவிட் பெஸ்மொஸ்கிஸ் (David Bezmozgis)
– ரஷியா சோவியத் யூனியனாக இருந்த பொழுது லற்வியாவின் ரீகா என்னும் கிராமத்தில் பிறந்தவர். தாய் தந்தையருடன் ஏழு வயதுக் குழந்தையாக கனடாவிற்குக் குடிபெயர்ந்தவர். தனது முப்பதாவது வயதில் “நடாஷா” என்னும் சிறுகதைத் தொகுப்பின் பரவலான கவனத்தைப் பெற்றவர். பல்கலைக் கழகத்தில் சிருஷ்டி இலக்கியம் கற்பிக்கக் கூடியவர். எழுத்து சார்ந்து தொடர்ந்து இயங்கக் கூடியவர். Web Site: www.bezmozgis.com

கிறிஸ் ஃபிலார்டி (Chris Filardi) 
– அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகம் ஒன்றில் PhD பட்டம் பெற்றவர். பிரசித்திபெற்ற The American Museum of Natural History என்னும் மியூசியத்தில் பறவையியல் விஞ்ஞானியாக (Ornithologist) வேலை செய்தவர். 

 மொகமட் நஸீகு அலி (Mohammed Naseehu Ali) – கானா நாட்டைச் சேர்ந்தவர். கானாவில் பிறந்து அங்கேயே படித்துவிட்டு, உயர் படிப்பிற்காக அமெரிக்காவின் பெனிங்டன் பல்கலைக் கழகத்தில் இசையையும், சிருஷ்டி இலக்கியத்தையும் விருப்பப் பாடங்களாகத் தெரிவு செய்துகொண்டவர். இசைக் குழுவை நடத்திக்கொண்டு வருபவர். இசையைப் போலவே எழுத்திலும் ஆர்வங்கொண்டவர்.

ஷ்யாம் செல்வதுரை (Shyam Selvadurai) இலங்கைத் தமிழர். கொழும்பில் பிறந்தவர். இனக் கலவரத்தின்போது பெற்றோருடன் இலங்கையைவிட்டுக் கனடாவிற்கு 19 வயதில் குடிபெயர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவரது “Funny Boy” புத்தகம் WH Smith Canada விருதையும் Lambda விருதையும் பெற்றது. இதில் முக்கியமானது, இலங்கை இனப் பிரச்சனையின் பின்னணியில் இரண்டு பதின்பருவத்துப் பையன்களின் ஒருபால் ஈர்ப்புக் காதலை (Gay) ஒளிவு மறைவின்றிச் சொன்னது. இவரது எல்லா நாவல்களும் ஹோமோசெக்ஸ் மற்றும் ஒருபால் ஈர்ப்பை மையமாகக் கொண்டவை. புலம்பெயர்ந்த தெற்காசியர்களின் 25 முக்கியமான கதைகளைத் தொகுத்தவர். இவரது படைப்புகள் ஏழு இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தனது ஆண் காதலருடன் சேர்ந்து வாழ்கிறார். Website: www.shyamselvadurai.com

ஜெனிவீவ் (Genevieve Kiley) – இரண்டு நாள் விருந்தாளியாக கனடாவிற்கு வந்திருந்த மரத்தான் ஓட்டப்பந்தய ஒலிம்பிக் வீராங்கனையுடனான அனுபவங்களை அ. முத்துலிங்கம் பகிர்ந்திருகிறார். 


ஜோர்ஜ் எல் ஹார்ட் (George L Hart)
– கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் (போர்க்லி) தமிழ்ப் பேராசிரியராக 1975ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றுபவர். தமிழ்த்துறை உட்பட நான்கு துறைகளின் தலைவர். ஆரம்பத்தில் (1969) சம்ஸ்கிருதப் பேராசிரியராக விஸ்கொன்சின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். இலத்தீன், கிரேக்கம், ரஷ்யன், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற உலக மொழிகளை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர். புறநானூறு மொழிபெயர்புக்காக தென்னாசிய மையத்து ஏ. கே. ராமானுஜன் பரிசைப் பெற்றவர். சங்க இலக்கியம் தொடர்பாக தமிழிலிருந்து பல ஆக்கங்களை ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றவர். மொழியியல் சார்ந்து இயங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் – செம்மொழி அந்தஸ்து குறித்து திறந்த மனதுடன் பேசிய வெளிநாட்டு தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர்.

டேவிட் ஓவன் (David Owen) – ஒரு வார்த்தைக்கு நாலு டாலர் சம்பளம் பெறுபவர். இவரது “The Known World” என்னும் நாவல் புலிட்சர் விருது பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்பு, இன்னொரு பெயரில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து அந்த அனுபவங்களை ஒளிவு மறைவின்றி “High School” என்ற புத்தகமாக எழுதினர். புத்தகம் வெளியில் வரும்வரை உடன் படித்த மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ அவரைப் பற்றித் தெரியவில்லை.

டீன் கில்மோர் (Dean Gilmour) – கனடாவின் புகழ்பெற்ற அரங்க நாடக நடிகர், நாடகாசிரியர், நெறியாளர். இவர் நாடகத் துறையில் புகழ்பெற்ற Jacques Lecoq என்பவர் நடத்திய பாரிஸ் பயிலரங்கில் நாடகத்துறையில் மேற்படிப்பை முடித்தவர். 1980 -ஆம் ஆண்டு முதல் சொந்த நாடகக் குழுவை ரொறொன்ரோவில் ஆரம்பித்து இயக்கி வருபவர். கனடா மட்டுமல்லாமல் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து, அமேரிக்கா, சீனா போன்ற 14 நாடுகளில் நாடகத்தை மேடையேற்றியவர். பல வருடங்களாக செக்கோவின் நாடகங்களை மேடையேற்றியவர். ஆண்டன் செக்காவ் எழுதிய ஐந்து நாடகங்களை ஒன்று சேர்ந்து நாடகமாக இவர் அரங்கேற்றியது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடகத்துக்கான கனடாவின் மிக உயர்ந்த டோரா விருதினைப் பெற்றவர்.

மேரி ஆன் மோகன்ராஜ் (Mary Anne Mohanraj) – ஆங்கிலத்தில் காம இலக்கியங்கள் (Porn literature, Erotica) படைப்பதில் உச்சத்தில் இருக்கும் பெண்மணி. காமக் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவர் ஓர் இலங்கைத் தமிழர். இரண்டு வயதாக இருக்கும்பொழுது அமெரிக்காவில் குடியேறியவர். யூட்டா பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். வெர்மோன்ட் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் வேலை செய்தவர். சமையல் குறிப்பு, தொகுப்புகள், நாவல்கள் என பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இணையத்தில் நாட்குறிப்பும் எழுதுகிறார். Website: www.mamohanraj.com

ரோபையாஸ் வூல்ஃப் (Tobias Wolff) அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர். சுயசரிதையும், நாவல்களும், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய சுயசரிதையான “This Boy’s Life”-க்கு Los Angeles Times Book Award விருதும், “The Barracks Thief” என்ற நாவல் PEN / Faulkner Award-ம் பெற்றுள்ளது. சிறுகதைகளுக்கு Rea Award பெற்றவர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக கடமையாற்றுகிறார். சிருஷ்டி இலக்கியம் போதிப்பவர்.

ஃபிராங்க் மக்கோர்ட் (Frank McCourt) – அயர்லாந்தில் தந்திச் சேவகராக வேலை பார்த்தவர். தனது 19ம் வயதில் அமெரிக்கா சென்று குடியேறியவர். பள்ளி ஆசிரியராக 32 வருடங்கள் வேலை செய்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற எட்டு வருடத்தில் மக்கோர்ட் தனது முதல் புத்தகமான Angela’s Ashes எழுதுகிறார். அது புலிட்சர் பரிசு மற்றும் National Book Awardஐயும் பெற்றுள்ளது. பின்னர் Tis, Teacher Man ஆகிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அறுபது வயதிற்கு மேல் எழுத ஆரம்பித்தவர்.

பிரிஸ்கி, காஃவ்மன் (Zana Briski, Ross Kauffman) – லண்டனில் பிறந்து வளர்ந்து எம்.ஏ பட்டம் பெற்றவர். ஓர் உந்துதலால் நியூயோர்க் வந்து குடியேறி புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றவர். “Born into Brothels” என்ற டாக்குமெண்ட்ரியின் மூலம் கல்கத்தாவின் சிகப்புவிளக்குப் பகுதியான (Red Light Area) சோனாகச்சியில் வசிக்கும் செக்ஸ் தொழிலாளர்களைப் பற்றிய விவரணப்படம் எடுக்க நினைத்து, பின்னர் அங்கு வசிக்கும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளைப் பற்றி விவரணப் படமாக்கியவர். இந்த டாக்குமென்டரி 2005 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் புக்கர் பரிசு போல, அமெரிக்காவில் புலிஸ்சர் பரிசு போல – கனடாவில் இலக்கியத்துக்குத் தரப்படும் பரிசுகளில் மிக உயர்ந்தது கில்லெர் விருது. “புத்தகங்களும் பரிசுகளும்” என்ற தலைப்பில் வார்ரென் கரியோ (Warren Cariou) கெல்லர் விருது பெற்றதையும், ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எலெய்ன் பெய்லின் (Elaine Beilin) பற்றிய கட்டுரையையும் தவிர்ந்த ஏனைய பகிர்வுகள் யாவும் குறிப்பிட்ட எழுத்தாளர்களுடனான உரையாடல்களாகத் தன் விரிகின்றது. பலரும் ஒளிவு மறைவின்றி பேசியிருக்கிறார்கள். சாதாரணமாகவே முத்துலிங்கத்தின் கட்டுரைகளில் புத்தகங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் ஆங்காங்கு புதையல்கள் போலக் கிடக்கும். இது மேற்கத்திய எழுத்தாளர்கள் மற்றும் ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு என்பதால், பரந்துபட்ட வாசிப்பில் நாட்டம் உடையவர்களுக்கு இந்தப் புத்தகம் அலாதியான இன்பத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தகத்தை வாங்க:
kalachuvadubooks@gmail.com 

Monday, March 17, 2014

தீண்டாமையின் அனுபவங்கள்

சித்திரங்களில் அம்பேத்கரின் வாழ்க்கை சம்பவங்களைச் சித்தரிக்கும் இந்நூல் பல இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

“தகுதி இருந்தும் மோசமான வேலையிலேயே ஒட்டிக்கிட்டிருக்க வேண்டியிருக்கு...”

“இதுக்குக் காரணம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு முறை இருப்பது தான். இது ஞாயமில்லை...”

“எனக்கு வேலை இல்லை. அதுக்குக் காரணம் இந்த இட ஒதுகீடுங்கிறது எனக்குத் தெரியும்...”

பேருந்துகளிலும், டீக்கடை சந்திப்புகளிலும் பேசிக்கொள்ளும் இது போன்ற பொதுஜன உரையாடல்களிலிருந்து தான் பீமாயணம் துவங்குகிறது. இட ஒதுக்கீடிற்குப் (Reservation) பின்னணியில் அம்பேத்கர் சந்தித்த சாதிய அடக்குமுறைகளும், அவமானங்களும் இருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அம்பேத்கரின் வரலாறு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவிலும் பெரிதான மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. தெருவிற்குத் தெரு அம்பேத்கரின் சிலைகள் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே B. R. அம்பேத்கரைப் பற்றிய வரலாறு சென்று சேர்ந்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். இந்திய விடுதலைக்காகப் போராடிய தேசியத் தலைவர்கள் மக்களின் நினைவுகளில் பசுமை மாறாமல் பதியவைக்கப்பட்டு உள்ளனர். "காந்தி, நேரு, பகத்சிங், பட்டேல்" என பட்டியல் நீளும். 

“பீமாவுக்காக ஒரு டிக்னா” என்ற பின் குறிப்பில், பீமாயணம் கதைக் குழுவில் இடம்பெற்ற எஸ். ஆனந்த் பின்வருமாறு கூறுகிறார்:

“இந்தியாவின் மறைக்கப்பட்டுள்ள தீண்டாமை துருதிஷ்டவசமாக உலக அக்கறைக்குரியதாக ஆகவில்லை. 1893 –ல் தென்னாப்ரிக்காவில் 24 வயது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி புகைவண்டியின் முதல் வகுப்பில் இருந்து தூக்கி வீசப்பட்டதை காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய சம்பவமாக உலக வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். இனப் பாகுபாட்டைக் கண்டுபிடிபதற்கு காந்தி தென் ஆபிரிக்காவிற்குப் போக வேண்டியிருந்தது. ஆனால் 1901 –ஆம் ஆண்டு பாம்பே ராஜதானியின் சதாராவில் இளம் அம்பேத்கர் தன் 10 –ஆவது வயதில் அதை எதிர்கொண்டார் என்பது மறைக்கப்பட்டுவிட்டது.”

இந்தச் சித்திரக் கதை வலுவான குறியீடுகளும், உருவகங்களும் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. தண்ணீர்
2. உறைவிடம்
3. பயணம்

இந்திய மேல்சாதி வகுப்பினரிடமிருந்து தீண்டத்தகாதவர்களாகவும், அடிமைகளாகவும் நசுக்கப்பட்ட 20% ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் போராடிய ஒருவரை விரல் நழுவ விட்டதின் புதிரானது அவிழ்
க்கப்பட வேண்டிய ஒன்று. 

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 - 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பரந்துபட்ட அளவில் வெவ்வேறு தளங்களில் பதிவு செய்திருக்கிறார். பத்து வயதில் பள்ளியில் பட்ட அனுபவம், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பிறகு பரோடாவில் கிடைத்த அனுபவம், பயணத்தின் போது பெற்ற அனுபவம் என்று இவை பல விதமானவை. 
பல்வேறு தடைகளைத் தாண்டிய அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகி, பின்னர் அரசியல் சாசனத்தை வடிவமைத்தார் என்பது வேறு கதை. 

அம்பேத்கர் கடைசியில் புத்த மதத்தைத் தழுவுகிறார். அவரது லட்சக் கணக்கான அபிமானிகளும் புத்தத்தை ஏற்கின்றனர். அவர் பெற்றது போன்ற அனுபவங்கள் இந்தியாவின் 17 கோடி தலித்துகளை இன்னமும் துரத்துகின்றன. அவர்களுக்கு இன்னமும் நீரும் தங்குமிடம் வாழ்வின் அடிப்படையான கௌரவங்களும் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? - என்பதை உலக அளவிற்கு உணர்த்த, வேர்விட்டு ஆலமரமாக வளர்ந்த சாதிய அடுக்கின் ஆணிவேரைப் பிடித்து அசைத்தவர். அந்த வகையில் இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவராக உலக மக்களால் போற்றப்படுபவர்.
“இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்?” என்பதை உலக அளவிற்கு உணர்த்த, வேர்விட்டு ஆலமரமாக வளர்ந்த சாதிய அடுக்கின் ஆணிவேரைப் பிடித்து அசைத்தவர். அந்த வகையில் இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவராக உலக மக்களால் போற்றப்படுபவர். எனினும் தற்போதைய தலைமுறையினருக்கு பீமாவின் போராட்ட வாழ்க்கையும், அதன் பின்னாலுள்ள பரந்துபட்ட அர்ப்பணிப்பும் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பதையும் உணர வேண்டும். 

பர்தான் - கோண்ட் பழங்குடி ஓவியக் கலை மரபைச் சேர்ந்த துர்காபாய் வ்யாமும், சுபாஷ் வியாமும் சித்திரக் கதையாக பீமாயணம் புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மஹாட் சத்தியாக்கிரகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைச் சமகால நிகழ்வுகளுடன் ஊடாடச் செய்கிறார்கள். மரபு சார்ந்த இலக்கணங்களை மீறும் அவர்கள், காவியத் தன்மை கொண்ட தங்கள் அற்புதமான கலையின் மூலம் சித்திரக்கலை மரபுக்குப் புத்துணர்வு அளிக்கிறார்கள். பீமாயணம் குழந்தைகளுக்கான புத்தகம். இது காமிக்ஸ் விரும்பிகளின் புத்தகம். மரபான சித்திரக் கலைப் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட, பழங்குடியினர் ஓவியங்களின் மூலம் விளிம்புநிலை மனிதர்களுக்காகப் போராடிய ஒருவரின் வாழ்வை சித்தரிக்கும் புத்தகம். வண்ண ஓவியங்களுடன் காலச்சுவடு மற்றும் நவயானா தமிழில் மொழிமாற்றி வெளியிட்டிருகிறார்கள். இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்thu ஏற்கனவே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீமாயணம் - புத்தக மதிப்புரைகள்


இந்தப் புத்தகத்திற்கு எழுத்தாளர் அருந்ததிராய் அளித்துள்ள குறிப்பு:

"இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளர்களின் ஒருவரான பீமாராவ் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதை பல ஆண்டுகளாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. பீமாயணம் வழமைக்கு மாறான அழகுடன் அந்தக் கதையைச் சொல்கிறது. மறக்க முடியாத புத்தகம் இது."

பீமாயணம் - தீண்டாமையின் அனுபவங்கள்
கலை: துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம்
கதை: ஸ்ரீவித்யா நடராஜன், எஸ். ஆனந்த்
தமிழில் : அரவிந்தன்
பக் : 108  | ரூ. 245

வாழ்க்கை வரலாறு | மொழிபெயர்ப்பு | தலித்தியம்

Friday, February 28, 2014

மேற்கத்திய ஓவியங்கள் – பி.ஏ. கிருஷ்ணன்

காலச்சுவடு இதழில் ஒரு வரலாற்று நூலையும், ஓர் ஆங்கில நாவலையும் பற்றி கட்டுரை எழுதும் பொழுது எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் ஓவியம் சார்ந்த விஷயங்களை முன்வைத்திருக்கிறார். அவையிரண்டும் “தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்” மற்றும் “முத்துக் காதணி அணிந்த பெண்” ஆகிய தலைப்புகளில் வெளியாகியிருக்கிறது. இவ்விரண்டு கட்டுரைகளும் பின்னர் “அக்கிரகாரத்தில் பெரியார்” என்ற கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. 


லண்டன் தேசியக் கலைக் கூடத்தில் காணக் கிடைத்த அனுபவத்தை முன்குறிப்பாக வைத்து, பால் ஜான்ஸனின் “மறுமலர்ச்சி” என்ற புத்தகத்தைப் பற்றியும், ராமச்சந்திர குஹாவின் இந்திய கிரிக்கெட்டைப் பல கோணங்களில் முன்வைக்கும் “அன்னிய விளையாட்டின் ஒரு ஓரம்” என்ற புத்தகத்தைப் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறார். குஹாவின் புத்தகம் பல்வங்கர் பாபு என்ற முதல் இந்திய தலித் கிரிக்கெட் வீரரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறது என்கிறார் கிருஷ்ணன். தலித் என்பதால் திறமையிருந்தும் பல்வங்கர் பாபு இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட விதத்தையும், அம்பேத்கரை எதிர்த்து அவர் அரசியலில் நின்ற சம்பவங்களையும் பேசக் கூடிய புத்தகம். இதன் சாரங்கள் தான் “தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்” என்ற கட்டுரை. முதல் கட்டுரையின் பத்தி இப்படி ஆரம்பிக்கிறது:

லண்டன் தேசீயக் கலைக் கூடத்தில் நுழைந்தால் முதல் அறையில் காட்சி தருவது ஹால்பைன் வரைந்த “தூதர்கள்” என்ற எண்ணெய்ச் சாய ஓவியம். நான் சென்றிருந்தபோது அந்த ஓவியத்தின் முன்பு வரிசையாகப் பள்ளிக் குழந்தைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஓர் ஆசிரியை மிகக் கவனத்தோடு அவர்களுக்கு அந்த ஓவியத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். விளக்கம் முடிந்தபின் நான் அவரிடம் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்வது எல்லாம் புரியுமா என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் மிக அழகாக இருந்தது. “மிக எளிமையாகத் தான் விளக்குகிறேன். பல குழந்தைகளுக்குப் புரியத் தான் செய்யும். புரியாவிட்டாலும் இங்கிருக்கும் ஓவியங்களோடு குழந்தைகளுக்கு ஒரு பிரிக்கமுடியாத தோழமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தோழமையே அவர்களைப் பின்னால் திரும்பத்திரும்ப இங்கு வரத் தூண்டும். அவர்களில் சிலர் நிச்சயமாக ஓவியக் கலையைத் தீவிரமாகப் பயில முயற்சி செய்வார்கள்.”

நமது பாடத்திட்டங்களில் நுண்கலைகளைப் பற்றிய பாடங்கள் இருப்பதாகவோ இருந்ததாகவோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் டிராயிங் மாஸ்டர் என்று ஒருவர் இருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆப்பிள் என்று ஒரு படம் வரைந்து, அதற்கு வண்ணம் பூசி, அவரது பாராட்டு பெற்ற ஞாபகம் இருக்கிறது. இப்போது டிராயிங் மாஸ்டர் நியமனம் செய்யும் அளவிற்குப் பள்ளிகளுக்கு நிதி வசதி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே ஓவியங்கள், சிற்பங்களோடு நமது குழந்தைகள் தோழமை கொள்ளும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

அதிர்ஷ்டவசமாக எனக்கு நுண்கலைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனது தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்தது. திருநெல்வேலியிலேயே மேற்கத்திய ஓவியங்கள், சிற்பங்கள் பற்றி அதிகமான புத்தகங்கள் கொண்ட நூல்நிலையம் அவருடையதாகத் தான் இருக்க வேண்டும். எனக்கு அவர் வீட்டிற்குள் எந்த நேரத்திலும் நுழைய அனுமதி இருந்தது. அவர் இல்லாவிட்டாலும் மாடி ஏறிப் புத்தக அலமாரிகளைச் சோதனையிடுவேன். பருமனான புத்தகங்கள். கவனமின்றித் தூக்கினால் கை சுளுக்கும். வழுவழுப்பான படங்கள். வழுவழுப்பான பெண்கள். ஆனால், ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் படிக்க முடியாது. ஒன்றுமே புரியாது. என்னுடைய தந்தையின் நண்பரிடம் சொன்னேன். ஒரு புத்தகத்தை உருவி ‘இதைப் படித்துப் பார்’ என்று சொன்னார். பெயர் Great Painters and Great Paintings. Reader’s Digest வெளியிட்டது என்று நினைக்கிறன். அந்தப் புத்தகம்தான் என்னை மேற்கத்திய ஓவிய உலகிற்குள் அழைத்துச் சென்றது. மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தை அன்றுவரை பாடப் புத்தகத்தில் ஒரு வார்தையாகத்தான் இருந்தது. மறுமலர்ச்சியின் உண்மையான வீச்சும் தாக்கமும் என்ன என்பது அன்றுதான் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. நான் அறிமுகம் செய்யப்போகும் முதற்புத்தகம் மறுமலர்ச்சியைப் பற்றியது.

கிரிகெட்டிற்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பலருக்குத் தெரியாது. புகழ்பெற்ற கிரிகெட் எழுத்துக்கள் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்தவை. புகழ்பெற்ற கிரிக்கெட் எழுத்துக்கள் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்தவை. Neville Cardus எழுதிய பல புத்தகங்கள் (இவர் விஜய் மெர்ச்சென்ட் – முஷ்டாக் அலி ஜோடியைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘as effective and as different, as curry and rice’ என்று எழுதினர்!). C.L.R James எழுதிய Beyond the boundary, Jack Fingledon எழுதிய Cricket Crisis, சமீபத்தில் மறைந்த சுஜித் முகர்ஜியின் Between Wickets என்று பட்டியல் நீளும். ராமச்சந்திர குஹா எழுதியிருக்கும் A corner of a Foreign Field நிச்சயமாக இந்தப் புத்தகங்களின் வரிசையில் வரக் கூடியது. நம்புங்கள். இது ஒரு விறுவிறுப்பான புத்தகம். நான் அறிமுகம் செய்யவிருக்கும் இரண்டாம் புத்தகம். (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 52, 53)

முத்துக் காதணி அணிந்த பெண்:

1992-ஆம் ஆண்டு. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து எனது நண்பன் நேராக ஹாக் (The Hague) நகரத்தில் இருக்கும் மாரிட்ஸ்ஹ்யூஸ் கலைக்கூடத்திற்கு என்னை அழைத்துச் சென்றான். “கூடம் அவ்வளவு பெரிது அல்ல. கூட்டம் அதிகம் இருக்காது. ஒரு மணி நேரத்தில் திரும்ப வந்துவிடலாம்” என்றான். நானும் அப்படித்தான் நினைத்தேன். கூட்டமே இல்லை. ஆனாலும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அங்கே நாங்கள் செலவிட்டோம்.

ஜான் வெர்மீர் (Jan Vermeer) பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சுக் கலைஞன். இவன் வரைந்தவை அதிகம் இல்லை. முப்பத்தைந்து ஓவியங்கள் தான். ஓவியங்கள் அதிகம் விலைபோனதாகத் தெரியவில்லை. இவனுடைய வாழ்க்கையைப் பற்றியும் அதிகம் தெரியாது. வாழ்ந்ததும் அதிகம் இல்லை. பிறப்பு 1632; மறவு 1675. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவன் புகழ்பெறவும் இல்லை. ஆனால் ரெம்பிராண்டிற்கு இணையாக இன்று பேசப்படும் கலைஞன் வெர்மீர். இருபதாம் நூற்றாண்டில் இவனது ஓவியங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டேபோனதால் வான் மீகெரன் (Van Meegeren) என்ற கலைஞன் போலிகளைத் தயாரித்து வெர்மீருடையது என்று சொல்லி கலை உலகையே ஏமாற்றிக் கொண்டிருந்தான்.

என்னைக் கேட்டால் வெர்மீர், ரெம்பிராண்டிற்கும் மேலானவன் என்பேன். அவன் வாழ்க்கையில் தினமும் நிகழும் தருணங்களின் அழகுகளை உணர்ந்து, ஓவியங்களில் உறையச் செய்தவன். இவனது ஓவியங்களில் உயிரில்லாப் பொருட்கள் உயிர் உள்ளவர்களைச் சார்ந்து வரையப்பட்டதால் உயிர் பெற்றது மட்டுமல்லாமல் ஒரு மறக்க முடியாத அமைதியையும் ஆன்மீக ஒளியையும் பெறுகின்றன. அசையாப் பொருட்களுக்கும் ஒரு உள்வயமான சுயமரியாதை இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் மகத்தான ஓவியங்கள் வெர்மீருடையவை. (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 85, 86)

மாரிட்ஸ்ஹ்யூஸ் கலைக்கூடத்திதில் வெர்மீரின் புகழ் பெற்ற இரண்டு ஓவியங்கள் இருக்கின்றன. ஒன்று View of Delft – டெல்ப்ட் (நகரக்) காட்சி.

மழை பெய்து ஓய்ந்த வேளை. நகரின் ஒவ்வொரு கட்டடமும் புதிதாகக் கழுவப்பட்டதால் வந்த பிரகாசத்தைப் பெற்றுத் தகதகக்கின்றன. மேகங்கள் மறுபடியும் மழை வரலாம் என்பதை அறிவிக்கின்றன. ஓவியன் நகரத்தை அதன் நடுவில் ஓடும் கால்வாயின் மறுபுறத்திலிருந்து பார்க்கிறான். கால்வாயின் இக்கரையில் கொஞ்சம் மக்கள். கால்வாயின் நடுவிலே சில படகுகள். கால்வாயில் சலனமுற்றுப் பிரதிபலிக்கும் கட்டடப் பிம்பங்கள். இவை எல்லாவற்றையும், இன்னும் பலவற்றையும் வெர்மீர் தனது ஓவியத்தில் கொண்டுவந்திருகிறான். ஆனாலும் அவனது ஓவியம் அடைசலாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் பாதி ஓவியத்தில் வானம் கவிந்திருகிறது. ஒரு மழை பெய்து ஓய்ந்த வேளையைக் காலத்தை வென்ற வேளையாக மாற்றும் மாயத்தைச் செய்யும் இந்த ஓவியத்தைப் பற்றிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியாது. மனிதனால் வரையப் பட்டவற்றிலேயே மிகச் சிறந்த படைப்பு இதுதான் என்று அவன் கூறியிருக்கிறான். ஓவியத்தைப் பார்த்தால் அவன் சொல்வது சரிதானோ என்று தோன்றும். (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 86)

கலைக்கூடத்தில் இருக்கும் மற்றொரு ஓவியம் – “Girl With A Pearl Ring” – ‘முத்துக் காதணி அணிந்த பெண்’. நாம் பேசவிருக்கும் நாவலின் தலைப்பும் இதுதான். இது ஓர் எளிய ஓவியம். பின்புலம் இல்லாதது. ஒரு இளம் பெண் கழுத்தைத் திருப்பி ஓவியனைப் பார்க்கிறாள். பாதி தெரியும் கன்னத்தில் ஒளி. முழுவதும் தெரியும் கன்னத்தில் நிழல். நம்மைத் திரும்பத் திரும்ப ஓவியத்தைப் பார்க்கச் செய்வது அந்தப் பெண்ணின் ஈர உதடுகளின் துளிர்வு. அவளது கண்களின் பளபளப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, சுடர்கின்ற முத்துக்காதனி. இந்த மூன்று ஒளித் துண்டுகளும் ஓவியத்திற்கு ஒரு வியக்கத்தக்க சமன்பாட்டையும் அமரத்துவம் பெற்ற நேரடித் தன்மையையும் கொடுக்கின்றன.


வெர்மீரைப் பற்றி அதிகம் தெரியாது என்று சொன்னேன். முத்துக் காதணி அணிந்த பெண் யாரென்றே தெரியாது. இந்த நாவல் அந்தப் பெண்ணின் வாய்மொழி. இந்தப் புத்தகம் பேரிலக்கிய வரிசையில் இடம்பெறும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் படிக்கும்போது எனக்கு 1992-ஆம் ஆண்டு நினைவிற்கு வந்துவிட்டது. ஓவியங்களை மறுபடியும் எப்போது பார்க்கப் போகிறோம் என்ற தாகம். இதுவே புத்தகத்தின் வெற்றி என எனக்குத் தோன்றுகிறது. (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 86, 87) மிக எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் திரைப்படமாக வந்திருப்பது. பார்க்கலாம். ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும். வெர்மீரின் உலகத்தை உங்களை எட்டிப் பார்க்க வைக்கும். எட்டிப் பார்த்தால் இழுத்துக் கொள்ளும் உலகம் அது. (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 91)

வெளிவர இருக்கும் கிருஷ்ணனின் “மேற்கத்திய ஓவியங்கள் – பாகம் 1” புத்தகத்தை முன் வெளியீட்டுத் திட்டத்தில் காலச்சுவடு பதிப்பகம் கொடுக்கிறது. மார்ச் 31 –ஆம் தேதி வரையிலும் ரூபாய் 850/- புத்தகத்தை ரூபாய் 500/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஓவியம் சார்ந்த தேடலும் ஈடுபாடும் உள்ள நண்பர்கள் சலுகை விலையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

தொடர்புக்கு: 
kalachuvadubooks@gmail.com

ஆசிரியரைப் பற்றி (P. A. Krishnan):

பி. அனந்தகிருஷ்ணன் (1946) – திருநெல்வேலியில் ஆரம்பக் கல்வியும், சென்னையில் முதுநிலை பௌதீகமும் முடித்தவர். கல்லூரி விரிவுரையாளராக சொற்ப காலம் பணியாற்றியவர், பின்னர் மத்திய அறிவியியல் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். போலவே, மத்திய அரசுப் பணியில் பல உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதுநிலை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ரேவதி கிருஷ்ணன் தில்லித் தமிழ்ப் பள்ளி ஒன்றில் ஆசிரியை. அவர்களுடைய ஒரே மகன் சித்தார்த், மருமகள் வினிதா ஆகியோர் அமெரிக்காவில் பணி புரிந்து கொண்டிருகிறார்கள். கிருஷ்ணனின் நாவல்கள் கடந்தகால இந்திய அரசியலின் போக்கை கதாப்பாத்திரங்களின் வாழ்கையினூடே நுட்பமாகப் பதிவு செய்பவையாகவும், கட்டுரைகள் யாவும் “உலக இலக்கியம், பயணம், சினிமா, கிரிகெட், வரலாறு, ஓவியம், புத்தகங்கள்” என பல்வேறு விஷயங்களின் சாரமாகவும் இருக்கும்.


ஆசிரியரின் தமிழ் நூல்கள்:

1. புலிநகக் கொன்றை (நாவல்)
2. அக்கிரகாரத்தில் பெரியார் (கட்டுரைகள்)
3. கலங்கிய நதி (நாவல்)
4. திரும்பிச் சென்ற தருணம் (கட்டுரைகள்)
5. மேற்கத்திய ஓவியங்கள் I & II (அச்சில்)

ஆசிரியரின் ஆங்கில நூல்கள்:

1. The Tiger Claw Tree
2. The Muddy River