காலச்சுவடு இதழில் ஒரு வரலாற்று நூலையும், ஓர் ஆங்கில நாவலையும் பற்றி கட்டுரை எழுதும் பொழுது எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் ஓவியம் சார்ந்த விஷயங்களை முன்வைத்திருக்கிறார். அவையிரண்டும் “தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்” மற்றும் “முத்துக் காதணி அணிந்த பெண்” ஆகிய தலைப்புகளில் வெளியாகியிருக்கிறது. இவ்விரண்டு கட்டுரைகளும் பின்னர் “அக்கிரகாரத்தில் பெரியார்” என்ற கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
லண்டன் தேசியக் கலைக் கூடத்தில் காணக் கிடைத்த அனுபவத்தை முன்குறிப்பாக வைத்து, பால் ஜான்ஸனின் “மறுமலர்ச்சி” என்ற புத்தகத்தைப் பற்றியும், ராமச்சந்திர குஹாவின் இந்திய கிரிக்கெட்டைப் பல கோணங்களில் முன்வைக்கும் “அன்னிய விளையாட்டின் ஒரு ஓரம்” என்ற புத்தகத்தைப் பற்றியும் கட்டுரை எழுதியிருக்கிறார். குஹாவின் புத்தகம் பல்வங்கர் பாபு என்ற முதல் இந்திய தலித் கிரிக்கெட் வீரரைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறது என்கிறார் கிருஷ்ணன். தலித் என்பதால் திறமையிருந்தும் பல்வங்கர் பாபு இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட விதத்தையும், அம்பேத்கரை எதிர்த்து அவர் அரசியலில் நின்ற சம்பவங்களையும் பேசக் கூடிய புத்தகம். இதன் சாரங்கள் தான் “தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்” என்ற கட்டுரை. முதல் கட்டுரையின் பத்தி இப்படி ஆரம்பிக்கிறது:
லண்டன் தேசீயக் கலைக் கூடத்தில் நுழைந்தால் முதல் அறையில் காட்சி தருவது ஹால்பைன் வரைந்த “தூதர்கள்” என்ற எண்ணெய்ச் சாய ஓவியம். நான் சென்றிருந்தபோது அந்த ஓவியத்தின் முன்பு வரிசையாகப் பள்ளிக் குழந்தைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஓர் ஆசிரியை மிகக் கவனத்தோடு அவர்களுக்கு அந்த ஓவியத்தைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். விளக்கம் முடிந்தபின் நான் அவரிடம் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்வது எல்லாம் புரியுமா என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் மிக அழகாக இருந்தது. “மிக எளிமையாகத் தான் விளக்குகிறேன். பல குழந்தைகளுக்குப் புரியத் தான் செய்யும். புரியாவிட்டாலும் இங்கிருக்கும் ஓவியங்களோடு குழந்தைகளுக்கு ஒரு பிரிக்கமுடியாத தோழமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தோழமையே அவர்களைப் பின்னால் திரும்பத்திரும்ப இங்கு வரத் தூண்டும். அவர்களில் சிலர் நிச்சயமாக ஓவியக் கலையைத் தீவிரமாகப் பயில முயற்சி செய்வார்கள்.”
நமது பாடத்திட்டங்களில் நுண்கலைகளைப் பற்றிய பாடங்கள் இருப்பதாகவோ இருந்ததாகவோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் டிராயிங் மாஸ்டர் என்று ஒருவர் இருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆப்பிள் என்று ஒரு படம் வரைந்து, அதற்கு வண்ணம் பூசி, அவரது பாராட்டு பெற்ற ஞாபகம் இருக்கிறது. இப்போது டிராயிங் மாஸ்டர் நியமனம் செய்யும் அளவிற்குப் பள்ளிகளுக்கு நிதி வசதி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே ஓவியங்கள், சிற்பங்களோடு நமது குழந்தைகள் தோழமை கொள்ளும் வாய்ப்புகள் மிகக் குறைவு.
அதிர்ஷ்டவசமாக எனக்கு நுண்கலைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனது தந்தையின் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்தது. திருநெல்வேலியிலேயே மேற்கத்திய ஓவியங்கள், சிற்பங்கள் பற்றி அதிகமான புத்தகங்கள் கொண்ட நூல்நிலையம் அவருடையதாகத் தான் இருக்க வேண்டும். எனக்கு அவர் வீட்டிற்குள் எந்த நேரத்திலும் நுழைய அனுமதி இருந்தது. அவர் இல்லாவிட்டாலும் மாடி ஏறிப் புத்தக அலமாரிகளைச் சோதனையிடுவேன். பருமனான புத்தகங்கள். கவனமின்றித் தூக்கினால் கை சுளுக்கும். வழுவழுப்பான படங்கள். வழுவழுப்பான பெண்கள். ஆனால், ஒரு பக்கத்திற்கு மேல் என்னால் படிக்க முடியாது. ஒன்றுமே புரியாது. என்னுடைய தந்தையின் நண்பரிடம் சொன்னேன். ஒரு புத்தகத்தை உருவி ‘இதைப் படித்துப் பார்’ என்று சொன்னார். பெயர் Great Painters and Great Paintings. Reader’s Digest வெளியிட்டது என்று நினைக்கிறன். அந்தப் புத்தகம்தான் என்னை மேற்கத்திய ஓவிய உலகிற்குள் அழைத்துச் சென்றது. மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தை அன்றுவரை பாடப் புத்தகத்தில் ஒரு வார்தையாகத்தான் இருந்தது. மறுமலர்ச்சியின் உண்மையான வீச்சும் தாக்கமும் என்ன என்பது அன்றுதான் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. நான் அறிமுகம் செய்யப்போகும் முதற்புத்தகம் மறுமலர்ச்சியைப் பற்றியது.
கிரிகெட்டிற்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பலருக்குத் தெரியாது. புகழ்பெற்ற கிரிகெட் எழுத்துக்கள் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்தவை. புகழ்பெற்ற கிரிக்கெட் எழுத்துக்கள் நல்ல இலக்கியத் தரம் வாய்ந்தவை. Neville Cardus எழுதிய பல புத்தகங்கள் (இவர் விஜய் மெர்ச்சென்ட் – முஷ்டாக் அலி ஜோடியைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘as effective and as different, as curry and rice’ என்று எழுதினர்!). C.L.R James எழுதிய Beyond the boundary, Jack Fingledon எழுதிய Cricket Crisis, சமீபத்தில் மறைந்த சுஜித் முகர்ஜியின் Between Wickets என்று பட்டியல் நீளும். ராமச்சந்திர குஹா எழுதியிருக்கும் A corner of a Foreign Field நிச்சயமாக இந்தப் புத்தகங்களின் வரிசையில் வரக் கூடியது. நம்புங்கள். இது ஒரு விறுவிறுப்பான புத்தகம். நான் அறிமுகம் செய்யவிருக்கும் இரண்டாம் புத்தகம். (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 52, 53)
முத்துக் காதணி அணிந்த பெண்:
1992-ஆம் ஆண்டு. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து எனது நண்பன் நேராக ஹாக் (The Hague) நகரத்தில் இருக்கும் மாரிட்ஸ்ஹ்யூஸ் கலைக்கூடத்திற்கு என்னை அழைத்துச் சென்றான். “கூடம் அவ்வளவு பெரிது அல்ல. கூட்டம் அதிகம் இருக்காது. ஒரு மணி நேரத்தில் திரும்ப வந்துவிடலாம்” என்றான். நானும் அப்படித்தான் நினைத்தேன். கூட்டமே இல்லை. ஆனாலும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அங்கே நாங்கள் செலவிட்டோம்.
ஜான் வெர்மீர் (Jan Vermeer) பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சுக் கலைஞன். இவன் வரைந்தவை அதிகம் இல்லை. முப்பத்தைந்து ஓவியங்கள் தான். ஓவியங்கள் அதிகம் விலைபோனதாகத் தெரியவில்லை. இவனுடைய வாழ்க்கையைப் பற்றியும் அதிகம் தெரியாது. வாழ்ந்ததும் அதிகம் இல்லை. பிறப்பு 1632; மறவு 1675. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவன் புகழ்பெறவும் இல்லை. ஆனால் ரெம்பிராண்டிற்கு இணையாக இன்று பேசப்படும் கலைஞன் வெர்மீர். இருபதாம் நூற்றாண்டில் இவனது ஓவியங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டேபோனதால் வான் மீகெரன் (Van Meegeren) என்ற கலைஞன் போலிகளைத் தயாரித்து வெர்மீருடையது என்று சொல்லி கலை உலகையே ஏமாற்றிக் கொண்டிருந்தான்.
என்னைக் கேட்டால் வெர்மீர், ரெம்பிராண்டிற்கும் மேலானவன் என்பேன். அவன் வாழ்க்கையில் தினமும் நிகழும் தருணங்களின் அழகுகளை உணர்ந்து, ஓவியங்களில் உறையச் செய்தவன். இவனது ஓவியங்களில் உயிரில்லாப் பொருட்கள் உயிர் உள்ளவர்களைச் சார்ந்து வரையப்பட்டதால் உயிர் பெற்றது மட்டுமல்லாமல் ஒரு மறக்க முடியாத அமைதியையும் ஆன்மீக ஒளியையும் பெறுகின்றன. அசையாப் பொருட்களுக்கும் ஒரு உள்வயமான சுயமரியாதை இருக்கிறதோ என்று எண்ணவைக்கும் மகத்தான ஓவியங்கள் வெர்மீருடையவை. (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 85, 86)
மாரிட்ஸ்ஹ்யூஸ் கலைக்கூடத்திதில் வெர்மீரின் புகழ் பெற்ற இரண்டு ஓவியங்கள் இருக்கின்றன. ஒன்று View of Delft – டெல்ப்ட் (நகரக்) காட்சி.
மழை பெய்து ஓய்ந்த வேளை. நகரின் ஒவ்வொரு கட்டடமும் புதிதாகக் கழுவப்பட்டதால் வந்த பிரகாசத்தைப் பெற்றுத் தகதகக்கின்றன. மேகங்கள் மறுபடியும் மழை வரலாம் என்பதை அறிவிக்கின்றன. ஓவியன் நகரத்தை அதன் நடுவில் ஓடும் கால்வாயின் மறுபுறத்திலிருந்து பார்க்கிறான். கால்வாயின் இக்கரையில் கொஞ்சம் மக்கள். கால்வாயின் நடுவிலே சில படகுகள். கால்வாயில் சலனமுற்றுப் பிரதிபலிக்கும் கட்டடப் பிம்பங்கள். இவை எல்லாவற்றையும், இன்னும் பலவற்றையும் வெர்மீர் தனது ஓவியத்தில் கொண்டுவந்திருகிறான். ஆனாலும் அவனது ஓவியம் அடைசலாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் பாதி ஓவியத்தில் வானம் கவிந்திருகிறது. ஒரு மழை பெய்து ஓய்ந்த வேளையைக் காலத்தை வென்ற வேளையாக மாற்றும் மாயத்தைச் செய்யும் இந்த ஓவியத்தைப் பற்றிச் சொல்லியிருப்பது எனக்குத் தெரியாது. மனிதனால் வரையப் பட்டவற்றிலேயே மிகச் சிறந்த படைப்பு இதுதான் என்று அவன் கூறியிருக்கிறான். ஓவியத்தைப் பார்த்தால் அவன் சொல்வது சரிதானோ என்று தோன்றும். (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 86)
கலைக்கூடத்தில் இருக்கும் மற்றொரு ஓவியம் – “Girl With A Pearl Ring” – ‘முத்துக் காதணி அணிந்த பெண்’. நாம் பேசவிருக்கும் நாவலின் தலைப்பும் இதுதான். இது ஓர் எளிய ஓவியம். பின்புலம் இல்லாதது. ஒரு இளம் பெண் கழுத்தைத் திருப்பி ஓவியனைப் பார்க்கிறாள். பாதி தெரியும் கன்னத்தில் ஒளி. முழுவதும் தெரியும் கன்னத்தில் நிழல். நம்மைத் திரும்பத் திரும்ப ஓவியத்தைப் பார்க்கச் செய்வது அந்தப் பெண்ணின் ஈர உதடுகளின் துளிர்வு. அவளது கண்களின் பளபளப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, சுடர்கின்ற முத்துக்காதனி. இந்த மூன்று ஒளித் துண்டுகளும் ஓவியத்திற்கு ஒரு வியக்கத்தக்க சமன்பாட்டையும் அமரத்துவம் பெற்ற நேரடித் தன்மையையும் கொடுக்கின்றன.
வெர்மீரைப் பற்றி அதிகம் தெரியாது என்று சொன்னேன். முத்துக் காதணி அணிந்த பெண் யாரென்றே தெரியாது. இந்த நாவல் அந்தப் பெண்ணின் வாய்மொழி. இந்தப் புத்தகம் பேரிலக்கிய வரிசையில் இடம்பெறும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் படிக்கும்போது எனக்கு 1992-ஆம் ஆண்டு நினைவிற்கு வந்துவிட்டது. ஓவியங்களை மறுபடியும் எப்போது பார்க்கப் போகிறோம் என்ற தாகம். இதுவே புத்தகத்தின் வெற்றி என எனக்குத் தோன்றுகிறது. (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 86, 87) மிக எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் திரைப்படமாக வந்திருப்பது. பார்க்கலாம். ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும். வெர்மீரின் உலகத்தை உங்களை எட்டிப் பார்க்க வைக்கும். எட்டிப் பார்த்தால் இழுத்துக் கொள்ளும் உலகம் அது. (அக்கிரகாரத்தில் பெரியார் – பக்கம்: 91)
வெளிவர இருக்கும் கிருஷ்ணனின் “மேற்கத்திய ஓவியங்கள் – பாகம் 1” புத்தகத்தை முன் வெளியீட்டுத் திட்டத்தில் காலச்சுவடு பதிப்பகம் கொடுக்கிறது. மார்ச் 31 –ஆம் தேதி வரையிலும் ரூபாய் 850/- புத்தகத்தை ரூபாய் 500/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஓவியம் சார்ந்த தேடலும் ஈடுபாடும் உள்ள நண்பர்கள் சலுகை விலையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
தொடர்புக்கு: kalachuvadubooks@gmail.com
ஆசிரியரைப் பற்றி (P. A. Krishnan):
பி. அனந்தகிருஷ்ணன் (1946) – திருநெல்வேலியில் ஆரம்பக் கல்வியும், சென்னையில் முதுநிலை பௌதீகமும் முடித்தவர். கல்லூரி விரிவுரையாளராக சொற்ப காலம் பணியாற்றியவர், பின்னர் மத்திய அறிவியியல் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். போலவே, மத்திய அரசுப் பணியில் பல உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதுநிலை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ரேவதி கிருஷ்ணன் தில்லித் தமிழ்ப் பள்ளி ஒன்றில் ஆசிரியை. அவர்களுடைய ஒரே மகன் சித்தார்த், மருமகள் வினிதா ஆகியோர் அமெரிக்காவில் பணி புரிந்து கொண்டிருகிறார்கள். கிருஷ்ணனின் நாவல்கள் கடந்தகால இந்திய அரசியலின் போக்கை கதாப்பாத்திரங்களின் வாழ்கையினூடே நுட்பமாகப் பதிவு செய்பவையாகவும், கட்டுரைகள் யாவும் “உலக இலக்கியம், பயணம், சினிமா, கிரிகெட், வரலாறு, ஓவியம், புத்தகங்கள்” என பல்வேறு விஷயங்களின் சாரமாகவும் இருக்கும்.
ஆசிரியரின் தமிழ் நூல்கள்:
1. புலிநகக் கொன்றை (நாவல்)
2. அக்கிரகாரத்தில் பெரியார் (கட்டுரைகள்)
3. கலங்கிய நதி (நாவல்)
4. திரும்பிச் சென்ற தருணம் (கட்டுரைகள்)
5. மேற்கத்திய ஓவியங்கள் I & II (அச்சில்)
ஆசிரியரின் ஆங்கில நூல்கள்:
1. The Tiger Claw Tree
2. The Muddy River
No comments:
Post a Comment