Monday, March 17, 2014

தீண்டாமையின் அனுபவங்கள்

சித்திரங்களில் அம்பேத்கரின் வாழ்க்கை சம்பவங்களைச் சித்தரிக்கும் இந்நூல் பல இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

“தகுதி இருந்தும் மோசமான வேலையிலேயே ஒட்டிக்கிட்டிருக்க வேண்டியிருக்கு...”

“இதுக்குக் காரணம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு முறை இருப்பது தான். இது ஞாயமில்லை...”

“எனக்கு வேலை இல்லை. அதுக்குக் காரணம் இந்த இட ஒதுகீடுங்கிறது எனக்குத் தெரியும்...”

பேருந்துகளிலும், டீக்கடை சந்திப்புகளிலும் பேசிக்கொள்ளும் இது போன்ற பொதுஜன உரையாடல்களிலிருந்து தான் பீமாயணம் துவங்குகிறது. இட ஒதுக்கீடிற்குப் (Reservation) பின்னணியில் அம்பேத்கர் சந்தித்த சாதிய அடக்குமுறைகளும், அவமானங்களும் இருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அம்பேத்கரின் வரலாறு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவிலும் பெரிதான மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. தெருவிற்குத் தெரு அம்பேத்கரின் சிலைகள் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே B. R. அம்பேத்கரைப் பற்றிய வரலாறு சென்று சேர்ந்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். இந்திய விடுதலைக்காகப் போராடிய தேசியத் தலைவர்கள் மக்களின் நினைவுகளில் பசுமை மாறாமல் பதியவைக்கப்பட்டு உள்ளனர். "காந்தி, நேரு, பகத்சிங், பட்டேல்" என பட்டியல் நீளும். 

“பீமாவுக்காக ஒரு டிக்னா” என்ற பின் குறிப்பில், பீமாயணம் கதைக் குழுவில் இடம்பெற்ற எஸ். ஆனந்த் பின்வருமாறு கூறுகிறார்:

“இந்தியாவின் மறைக்கப்பட்டுள்ள தீண்டாமை துருதிஷ்டவசமாக உலக அக்கறைக்குரியதாக ஆகவில்லை. 1893 –ல் தென்னாப்ரிக்காவில் 24 வயது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி புகைவண்டியின் முதல் வகுப்பில் இருந்து தூக்கி வீசப்பட்டதை காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய சம்பவமாக உலக வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். இனப் பாகுபாட்டைக் கண்டுபிடிபதற்கு காந்தி தென் ஆபிரிக்காவிற்குப் போக வேண்டியிருந்தது. ஆனால் 1901 –ஆம் ஆண்டு பாம்பே ராஜதானியின் சதாராவில் இளம் அம்பேத்கர் தன் 10 –ஆவது வயதில் அதை எதிர்கொண்டார் என்பது மறைக்கப்பட்டுவிட்டது.”

இந்தச் சித்திரக் கதை வலுவான குறியீடுகளும், உருவகங்களும் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. தண்ணீர்
2. உறைவிடம்
3. பயணம்

இந்திய மேல்சாதி வகுப்பினரிடமிருந்து தீண்டத்தகாதவர்களாகவும், அடிமைகளாகவும் நசுக்கப்பட்ட 20% ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் போராடிய ஒருவரை விரல் நழுவ விட்டதின் புதிரானது அவிழ்
க்கப்பட வேண்டிய ஒன்று. 

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 - 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பரந்துபட்ட அளவில் வெவ்வேறு தளங்களில் பதிவு செய்திருக்கிறார். பத்து வயதில் பள்ளியில் பட்ட அனுபவம், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பிறகு பரோடாவில் கிடைத்த அனுபவம், பயணத்தின் போது பெற்ற அனுபவம் என்று இவை பல விதமானவை. 
பல்வேறு தடைகளைத் தாண்டிய அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகி, பின்னர் அரசியல் சாசனத்தை வடிவமைத்தார் என்பது வேறு கதை. 

அம்பேத்கர் கடைசியில் புத்த மதத்தைத் தழுவுகிறார். அவரது லட்சக் கணக்கான அபிமானிகளும் புத்தத்தை ஏற்கின்றனர். அவர் பெற்றது போன்ற அனுபவங்கள் இந்தியாவின் 17 கோடி தலித்துகளை இன்னமும் துரத்துகின்றன. அவர்களுக்கு இன்னமும் நீரும் தங்குமிடம் வாழ்வின் அடிப்படையான கௌரவங்களும் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? - என்பதை உலக அளவிற்கு உணர்த்த, வேர்விட்டு ஆலமரமாக வளர்ந்த சாதிய அடுக்கின் ஆணிவேரைப் பிடித்து அசைத்தவர். அந்த வகையில் இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவராக உலக மக்களால் போற்றப்படுபவர்.
“இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்?” என்பதை உலக அளவிற்கு உணர்த்த, வேர்விட்டு ஆலமரமாக வளர்ந்த சாதிய அடுக்கின் ஆணிவேரைப் பிடித்து அசைத்தவர். அந்த வகையில் இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவராக உலக மக்களால் போற்றப்படுபவர். எனினும் தற்போதைய தலைமுறையினருக்கு பீமாவின் போராட்ட வாழ்க்கையும், அதன் பின்னாலுள்ள பரந்துபட்ட அர்ப்பணிப்பும் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பதையும் உணர வேண்டும். 

பர்தான் - கோண்ட் பழங்குடி ஓவியக் கலை மரபைச் சேர்ந்த துர்காபாய் வ்யாமும், சுபாஷ் வியாமும் சித்திரக் கதையாக பீமாயணம் புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மஹாட் சத்தியாக்கிரகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைச் சமகால நிகழ்வுகளுடன் ஊடாடச் செய்கிறார்கள். மரபு சார்ந்த இலக்கணங்களை மீறும் அவர்கள், காவியத் தன்மை கொண்ட தங்கள் அற்புதமான கலையின் மூலம் சித்திரக்கலை மரபுக்குப் புத்துணர்வு அளிக்கிறார்கள். பீமாயணம் குழந்தைகளுக்கான புத்தகம். இது காமிக்ஸ் விரும்பிகளின் புத்தகம். மரபான சித்திரக் கலைப் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட, பழங்குடியினர் ஓவியங்களின் மூலம் விளிம்புநிலை மனிதர்களுக்காகப் போராடிய ஒருவரின் வாழ்வை சித்தரிக்கும் புத்தகம். வண்ண ஓவியங்களுடன் காலச்சுவடு மற்றும் நவயானா தமிழில் மொழிமாற்றி வெளியிட்டிருகிறார்கள். இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்thu ஏற்கனவே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீமாயணம் - புத்தக மதிப்புரைகள்


இந்தப் புத்தகத்திற்கு எழுத்தாளர் அருந்ததிராய் அளித்துள்ள குறிப்பு:

"இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளர்களின் ஒருவரான பீமாராவ் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதை பல ஆண்டுகளாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. பீமாயணம் வழமைக்கு மாறான அழகுடன் அந்தக் கதையைச் சொல்கிறது. மறக்க முடியாத புத்தகம் இது."

பீமாயணம் - தீண்டாமையின் அனுபவங்கள்
கலை: துர்காபாய் வ்யாம், சுபாஷ் வ்யாம்
கதை: ஸ்ரீவித்யா நடராஜன், எஸ். ஆனந்த்
தமிழில் : அரவிந்தன்
பக் : 108  | ரூ. 245

வாழ்க்கை வரலாறு | மொழிபெயர்ப்பு | தலித்தியம்

No comments:

Post a Comment