Thursday, March 27, 2014

வியத்தலும் இலமே – ஆளுமைகள் சந்திப்புகள்

பல்துறையைச் சேர்ந்த மேற்கத்திய ஆளுமைகளுடனான சந்திப்புகளை அ. முத்துலிங்கம் தொகுப்பாக்கியிருகிறார். தமிழ் சூழலில் இது போன்ற முயற்சி புதியது. மேற்கத்திய நவீன இலக்கியத்தின் போக்கை படைப்பாளிகளின் உரையாடல்களின் மூலம் வெளிக்கொண்டு வரும் உரையாடல்கள் இவை. . சமீபத்தில் நோபல் விருது பெற்ற அலிஸ் மன்றோ முதல் பல எழுத்தாளர்கள் இப்புத்தகத்தில் உரையாடுகிறார்கள். போலவே பறவையியல் விஞ்ஞானி கிறிஸ் ஃபிலார்டி, மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஜெனிவீவ், ஆஸ்கார் விருது பெற்ற பிரிஸ்கி – காஃவ்மன், பிரபல நாடகக்காரரான டீன் கில்மோர் என உரையாடுபவர்களின் பட்டியல் நீள்கிறது.

போலவே “ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இலங்கை, இந்தியா, கானா, சோவியத் யூனியன்” போன்ற நாடுகளில் பிறந்து - புலம்பெயர்ந்த ஆங்கில எழுத்தாளர்களாக விளங்கும் சிலரது பகிர்வுகளும் படைப்பாளிகளின் வேறுபட்ட முகங்களை நமக்குக் காட்டுகிறது. இந்த உரையாடல்கள் வித்யாசமான, அதே நேரத்தில் சுவாஸ்யமான நேர்முகங்களாகவும் பதிவாகி இருக்கின்றன. தொகுப்பிலுள்ள ஆளுமைகளைப் பற்றிய விவரங்கள் 
பின்வருமாறு: 
அலீஸ் மன்றோ (Alice Munro) – மேற்கத்திய சிறுகதையாளர். இவரது பல்லாண்டு கால இலக்கியப் பங்களிப்பிற்காக சமீபத்தில் நோபல் விருது அறிவித்திருக்கிறார்கள். கனடா ஆளுநர் விருதை மூன்று முறையும், கெல்லர் பரிசை இரண்டு முறையும், உலக அளவில் பொதுநல நாடுகள் எழுத்தாளர் பரிசு, ஓ ஹென்றி பரிசு, ஸ்மித் இலக்கிய விருது, ரில்லியம் புத்தகப் பரிசு என்று பல விருதுகளையும் பெற்றவர். இதுதவிர National Book Critics Circle Award, US National Arts Club பரிசும் பெற்றவர். (இவரைப் பற்றிய ஒரு நேர்முகமும், ஒரு கட்டுரையும் இத்தொகுப்பில் உள்ளது.)

மார்கிரட் அட்வூட் (Margaret Atwood) – பிரபல ஆங்கில எழுத்தாளர். இவரது எழுத்து பெண்ணியம் சார்ந்தது. கனடா ஆளுநர் பரிசை இரண்டு முறையும், 1996ல் Alias Grace நாவலுக்கு கெல்லர் பரிசும், 2000 ஆண்டில் The Blind Assassin என்ற நாவலுக்கு புக்கர் விருதும் பெற்றவர். 12 நாவல்கள், 15 கவிதைத் தொகுப்புகள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 4 சிறுவர் இலக்கிய நூல்கள், 4 கட்டுரைத் தொகுப்புகள் என வளமான இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர். உலகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி சிறப்பு செய்திருக்கின்றன. Web Site: www.margaretatwood.ca

அமினாட்டா ஃபோர்னா (Aminatta Forna) – ஆப்பிரிக்க வம்சாவளி. இங்கிலாந்தில் சட்டம் படித்துவிட்டு BBC-இல் பணி புரிந்தவர். பத்திரிகையாளராகவும் இயக்குநராகவும் தொகுப்பாளராகவும் வேலை பார்த்தவர். பல விவரணப் படங்களை எடுத்தவர். இவரது “Through African Eyes” விவரணப்படம் பல்கலைக்கழக பயிற்சி வகுப்புகளுக்கு அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது. நாவல், கட்டுரை, சிறுகதை எனப் பல தளங்களிலும் இயங்கக் கூடியவர். இவரது The Devil that danced on the water நாவலின் வெற்றிக்குப் பிறகு முழுநேர எழுத்தாளர் ஆனவர். Web Site: www.aminattaforna.com

அகில் சர்மா (Akhil Sharma) – இந்தியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். பிரின்ஸ்டன், ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்தவர். யூனிவேர்செல் ஸ்டூடியோவில் சினிமாவிற்கு வசனம் எழுதியவர். ஹார்வார்ட்டில் சேர்ந்து சட்டம் பயின்று Investment Bankerஆக நியூயோர்க்கின் பிரபலமான கம்பெனியில் ஆண்டொன்றிற்கு மில்லியன் டாலர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். பின்னர் கல்யாணமான சில மாதங்களில் வேலையை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக மாறியவர். 

டேவிட் செடாரிஸ் (David Sedaris) – இருபது வயதில் நியூயார்க் நகரில் துப்புரவுத் தொழிலாளராக வேலை பார்த்துக்கொண்டே எழுதத் தொடங்கியவர். இவரது படைப்புகள் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒருபால் ஈர்ப்புடையவர். இவரது பல நாடகங்கள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. லாம்டா இலக்கிய விருதும் தேர்பர் விருதும் பெற்றவர். தனது ஆண் காதலருடன் வசிக்கிறார். (இவரது ஒரு நேர்காணலும், ஒரு சந்திப்பும் தொகுப்பில் உள்ளது.) Web Site: www.davidsedarisbooks.com

டேவிட் பெஸ்மொஸ்கிஸ் (David Bezmozgis)
– ரஷியா சோவியத் யூனியனாக இருந்த பொழுது லற்வியாவின் ரீகா என்னும் கிராமத்தில் பிறந்தவர். தாய் தந்தையருடன் ஏழு வயதுக் குழந்தையாக கனடாவிற்குக் குடிபெயர்ந்தவர். தனது முப்பதாவது வயதில் “நடாஷா” என்னும் சிறுகதைத் தொகுப்பின் பரவலான கவனத்தைப் பெற்றவர். பல்கலைக் கழகத்தில் சிருஷ்டி இலக்கியம் கற்பிக்கக் கூடியவர். எழுத்து சார்ந்து தொடர்ந்து இயங்கக் கூடியவர். Web Site: www.bezmozgis.com

கிறிஸ் ஃபிலார்டி (Chris Filardi) 
– அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகம் ஒன்றில் PhD பட்டம் பெற்றவர். பிரசித்திபெற்ற The American Museum of Natural History என்னும் மியூசியத்தில் பறவையியல் விஞ்ஞானியாக (Ornithologist) வேலை செய்தவர். 

 மொகமட் நஸீகு அலி (Mohammed Naseehu Ali) – கானா நாட்டைச் சேர்ந்தவர். கானாவில் பிறந்து அங்கேயே படித்துவிட்டு, உயர் படிப்பிற்காக அமெரிக்காவின் பெனிங்டன் பல்கலைக் கழகத்தில் இசையையும், சிருஷ்டி இலக்கியத்தையும் விருப்பப் பாடங்களாகத் தெரிவு செய்துகொண்டவர். இசைக் குழுவை நடத்திக்கொண்டு வருபவர். இசையைப் போலவே எழுத்திலும் ஆர்வங்கொண்டவர்.

ஷ்யாம் செல்வதுரை (Shyam Selvadurai) இலங்கைத் தமிழர். கொழும்பில் பிறந்தவர். இனக் கலவரத்தின்போது பெற்றோருடன் இலங்கையைவிட்டுக் கனடாவிற்கு 19 வயதில் குடிபெயர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவரது “Funny Boy” புத்தகம் WH Smith Canada விருதையும் Lambda விருதையும் பெற்றது. இதில் முக்கியமானது, இலங்கை இனப் பிரச்சனையின் பின்னணியில் இரண்டு பதின்பருவத்துப் பையன்களின் ஒருபால் ஈர்ப்புக் காதலை (Gay) ஒளிவு மறைவின்றிச் சொன்னது. இவரது எல்லா நாவல்களும் ஹோமோசெக்ஸ் மற்றும் ஒருபால் ஈர்ப்பை மையமாகக் கொண்டவை. புலம்பெயர்ந்த தெற்காசியர்களின் 25 முக்கியமான கதைகளைத் தொகுத்தவர். இவரது படைப்புகள் ஏழு இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தனது ஆண் காதலருடன் சேர்ந்து வாழ்கிறார். Website: www.shyamselvadurai.com

ஜெனிவீவ் (Genevieve Kiley) – இரண்டு நாள் விருந்தாளியாக கனடாவிற்கு வந்திருந்த மரத்தான் ஓட்டப்பந்தய ஒலிம்பிக் வீராங்கனையுடனான அனுபவங்களை அ. முத்துலிங்கம் பகிர்ந்திருகிறார். 


ஜோர்ஜ் எல் ஹார்ட் (George L Hart)
– கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் (போர்க்லி) தமிழ்ப் பேராசிரியராக 1975ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றுபவர். தமிழ்த்துறை உட்பட நான்கு துறைகளின் தலைவர். ஆரம்பத்தில் (1969) சம்ஸ்கிருதப் பேராசிரியராக விஸ்கொன்சின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். இலத்தீன், கிரேக்கம், ரஷ்யன், ஜெர்மன், பிரஞ்சு, ஆங்கிலம், தமிழ், மலையாளம் போன்ற உலக மொழிகளை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர். புறநானூறு மொழிபெயர்புக்காக தென்னாசிய மையத்து ஏ. கே. ராமானுஜன் பரிசைப் பெற்றவர். சங்க இலக்கியம் தொடர்பாக தமிழிலிருந்து பல ஆக்கங்களை ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றவர். மொழியியல் சார்ந்து இயங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் – செம்மொழி அந்தஸ்து குறித்து திறந்த மனதுடன் பேசிய வெளிநாட்டு தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர்.

டேவிட் ஓவன் (David Owen) – ஒரு வார்த்தைக்கு நாலு டாலர் சம்பளம் பெறுபவர். இவரது “The Known World” என்னும் நாவல் புலிட்சர் விருது பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்பு, இன்னொரு பெயரில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து அந்த அனுபவங்களை ஒளிவு மறைவின்றி “High School” என்ற புத்தகமாக எழுதினர். புத்தகம் வெளியில் வரும்வரை உடன் படித்த மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ அவரைப் பற்றித் தெரியவில்லை.

டீன் கில்மோர் (Dean Gilmour) – கனடாவின் புகழ்பெற்ற அரங்க நாடக நடிகர், நாடகாசிரியர், நெறியாளர். இவர் நாடகத் துறையில் புகழ்பெற்ற Jacques Lecoq என்பவர் நடத்திய பாரிஸ் பயிலரங்கில் நாடகத்துறையில் மேற்படிப்பை முடித்தவர். 1980 -ஆம் ஆண்டு முதல் சொந்த நாடகக் குழுவை ரொறொன்ரோவில் ஆரம்பித்து இயக்கி வருபவர். கனடா மட்டுமல்லாமல் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து, அமேரிக்கா, சீனா போன்ற 14 நாடுகளில் நாடகத்தை மேடையேற்றியவர். பல வருடங்களாக செக்கோவின் நாடகங்களை மேடையேற்றியவர். ஆண்டன் செக்காவ் எழுதிய ஐந்து நாடகங்களை ஒன்று சேர்ந்து நாடகமாக இவர் அரங்கேற்றியது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடகத்துக்கான கனடாவின் மிக உயர்ந்த டோரா விருதினைப் பெற்றவர்.

மேரி ஆன் மோகன்ராஜ் (Mary Anne Mohanraj) – ஆங்கிலத்தில் காம இலக்கியங்கள் (Porn literature, Erotica) படைப்பதில் உச்சத்தில் இருக்கும் பெண்மணி. காமக் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவர் ஓர் இலங்கைத் தமிழர். இரண்டு வயதாக இருக்கும்பொழுது அமெரிக்காவில் குடியேறியவர். யூட்டா பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். வெர்மோன்ட் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் வேலை செய்தவர். சமையல் குறிப்பு, தொகுப்புகள், நாவல்கள் என பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இணையத்தில் நாட்குறிப்பும் எழுதுகிறார். Website: www.mamohanraj.com

ரோபையாஸ் வூல்ஃப் (Tobias Wolff) அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர். சுயசரிதையும், நாவல்களும், சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவருடைய சுயசரிதையான “This Boy’s Life”-க்கு Los Angeles Times Book Award விருதும், “The Barracks Thief” என்ற நாவல் PEN / Faulkner Award-ம் பெற்றுள்ளது. சிறுகதைகளுக்கு Rea Award பெற்றவர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராக கடமையாற்றுகிறார். சிருஷ்டி இலக்கியம் போதிப்பவர்.

ஃபிராங்க் மக்கோர்ட் (Frank McCourt) – அயர்லாந்தில் தந்திச் சேவகராக வேலை பார்த்தவர். தனது 19ம் வயதில் அமெரிக்கா சென்று குடியேறியவர். பள்ளி ஆசிரியராக 32 வருடங்கள் வேலை செய்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற எட்டு வருடத்தில் மக்கோர்ட் தனது முதல் புத்தகமான Angela’s Ashes எழுதுகிறார். அது புலிட்சர் பரிசு மற்றும் National Book Awardஐயும் பெற்றுள்ளது. பின்னர் Tis, Teacher Man ஆகிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அறுபது வயதிற்கு மேல் எழுத ஆரம்பித்தவர்.

பிரிஸ்கி, காஃவ்மன் (Zana Briski, Ross Kauffman) – லண்டனில் பிறந்து வளர்ந்து எம்.ஏ பட்டம் பெற்றவர். ஓர் உந்துதலால் நியூயோர்க் வந்து குடியேறி புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றவர். “Born into Brothels” என்ற டாக்குமெண்ட்ரியின் மூலம் கல்கத்தாவின் சிகப்புவிளக்குப் பகுதியான (Red Light Area) சோனாகச்சியில் வசிக்கும் செக்ஸ் தொழிலாளர்களைப் பற்றிய விவரணப்படம் எடுக்க நினைத்து, பின்னர் அங்கு வசிக்கும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளைப் பற்றி விவரணப் படமாக்கியவர். இந்த டாக்குமென்டரி 2005 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் புக்கர் பரிசு போல, அமெரிக்காவில் புலிஸ்சர் பரிசு போல – கனடாவில் இலக்கியத்துக்குத் தரப்படும் பரிசுகளில் மிக உயர்ந்தது கில்லெர் விருது. “புத்தகங்களும் பரிசுகளும்” என்ற தலைப்பில் வார்ரென் கரியோ (Warren Cariou) கெல்லர் விருது பெற்றதையும், ஷேக்ஸ்பியரின் காலத்தில் வாழ்ந்த எலெய்ன் பெய்லின் (Elaine Beilin) பற்றிய கட்டுரையையும் தவிர்ந்த ஏனைய பகிர்வுகள் யாவும் குறிப்பிட்ட எழுத்தாளர்களுடனான உரையாடல்களாகத் தன் விரிகின்றது. பலரும் ஒளிவு மறைவின்றி பேசியிருக்கிறார்கள். சாதாரணமாகவே முத்துலிங்கத்தின் கட்டுரைகளில் புத்தகங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் ஆங்காங்கு புதையல்கள் போலக் கிடக்கும். இது மேற்கத்திய எழுத்தாளர்கள் மற்றும் ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு என்பதால், பரந்துபட்ட வாசிப்பில் நாட்டம் உடையவர்களுக்கு இந்தப் புத்தகம் அலாதியான இன்பத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தகத்தை வாங்க:
kalachuvadubooks@gmail.com 

1 comment: